×

ஜனவரி மாதம் முதல் நகர்புறங்களில் நடைமுறைக்கு வருகிறது டாஸ்மாக் கடைகளில் இனி ஸ்வைப்பிங் மெஷின் முறைகேடுகளை தடுக்க நிர்வாகம் நடவடிக்கை

வேலூர், டிச.4:டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஜனவரி மாதம் முதற்கட்டமாக நகர்புறங்களில் ஸ்வைப்பிங் மெஷின் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தற்போது 4,701 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகிறது. இவற்றில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒரு கடைக்கு ஒரு மேற்பார்வையாளர், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 4 ேபரும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒரு மேற்பார்வையாளரும், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 3 ேபரும், ஊராட்சி பகுதியில் ஒரு மேற்பார்வையாளர், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 3 பேரும் பணியில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 488 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 164 டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள், மேலாளர் அலுவலகங்கள், பறக்கும்படை பிரிவு, டாஸ்மாக் கடைகளில் இருந்த பணியிடங்களில் அவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். 174 கடைபணியாளர்கள் கூட்டுறவு துறையில் அமர்த்தப்பட்டனர்.இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது, ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. இதில் முறைகேடுகளில் ஈடுபடும் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட (எம்ஆர்பி) கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ₹1 க்கு ₹1000 முதல் ஜிஎஸ்டியுடன் அதிகபட்சமாக ₹10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது. இதை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ஸ்வைப்பிங் மெஷின் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜனவரி மாதம் முதல் நகரப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இந்த ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக விரைவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வங்கி அதிகாரிகள் சார்பில் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் விலைக்கு சரக்குகளை விற்பனை செய்வது தடுக்க முடியும். மேலும் ஊழியர்களிடம் பணத்தை கொள்ளையடிக்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது’ என்றனர்.

Tags : stores ,areas ,Tashmak ,
× RELATED கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!